டிக்-டாக் வீடியோவால், பலரின் வாழ்க்கை கேள்விக்குறியாகி வருகிறது. ஒரு 'லைக்'கிற்காக கவர்ச்சி ஆடையில் இருபாலரும், டிக்-டாக் மோகம் பிடித்து திரிகின்றனர்.
இதனால், அவர்களது வாழ்க்கையில் பல சர்ச்சைகள் எழுகின்றன. இது ஒருபுறம் இருக்க, டிக்-டாக்கில் இளைஞர் ஒருவர் கிராம பெண்களை அவதூறாக பேசிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், நாகலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுகந்தி. இவர், தனது சகோதரியுடன், சமீபத்தில் டிக்-டாக் செயலியில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அடையாளம் தெரிந்த, பெயர் விலாசம் தெரியாத, நபர் ஒருவர், சுகந்தி, அவரது சகோதரி ஆகிய இருவரையும் தகாத வார்த்தைகளால் பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், அவர்கள் இருவரையும் கடுமையான வார்த்தைகளால் பேசியது மட்டுமல்லாமல், நாகலாபுரம் கிராம பெண்களையும் தகாத வார்த்தைகளால் பேசி விமர்சனம் செய்துள்ளார்.
இந்த வீடியோ வெளியானதால், கோபமடைந்த நாகலாபுரம் கிராமப் பெண்கள், பழனிசெட்டிபட்டி காவல்நிலையத்தில் இதுசம்பந்தமாக புகாரளித்தனர். அந்தப் புகாரில், வீடியோ வெளியிட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்ய வேண்டும், டிக்-டாக் வீடியோ செய்த இரண்டு பெண்களையும், ஊரை விட்டு வெளியேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.