மண் அள்ளி தூற்றி விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே பாபநாசம் வட்டம், திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை செயல்பட்டு வந்த நிலையில், ஆலையைத் தொடர்ந்து நடத்த முடியாத அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறி, கடந்த 2018ஆம் ஆண்டு சர்க்கரை ஆலை இழுத்து மூடப்பட்டது.
இதனால், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை 200 கோடி ரூபாயை வழங்கவில்லை. மேலும் சர்க்கரை ஆலை நிர்வாகம், விவசாயிகளை ஏமாற்றி பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகளின் பெயரில் 300 கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்று, அதனை திரும்பச் செலுத்தவில்லை. தற்போது விவசாயிகள் வாங்காத கடனால் அல்லல்பட்டு வருகின்றனர். எனவே, இதனை உடனடியாக திரும்ப வழங்கிட வேண்டும் என கடந்த 333 நாட்களாக தொடர்ந்து போராடி வந்த நிலையில், ஆலை நிர்வாகம் இதைக் கண்டுகொள்ளவில்லை.
கரும்பு விவசாயிகள், இந்த ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்திட வேண்டும் என்று போராடி வந்தனர். எனினும் இதுவரை தீர்வு கிடைத்தபாடில்லை. தமிழக அரசும் இதை கண்டு கொள்ளாத நிலையில், போராட்டத்தில் 333வது நாளான நேற்று மாலை, ஏராளமான கரும்பு விவசாயிகள் சங்க கொடி ஏந்தி, ஊர்வலகமாக வந்து ஆலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சர்க்கரை ஆலை செயல்படாததால் மனம் நொந்து போன விவசாயிகள் சபிக்கும் வகையில் ஆலையை நோக்கி, மண்ணை வாரி தூற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இது குறித்து விவசாயி ஒருவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, “இன்றோடு 333 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறோம். சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 200 கோடி ரூபாயைத் தரவில்லை. விவசாயிகளின் பேரில் 300 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. அதையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இத்தகைய முறைகேடு, ஊழல்கள் நடைபெற்ற பிறகும் ஏன் இந்த அரசாங்கம் வேடிக்கை பார்க்கிறது. இந்த பிரச்னையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும். அதுவரை இந்த போராட்டம் தொடரும்” என்றார்.
இதையும் படிங்க:Annabhishekam: தஞ்சை தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் 108 கிலோ அன்னத்தைக் கொண்டு அன்னாபிஷேகம்!