தேனி:ஆண்டிபட்டி அருகே பெரியகுளத்தில் உள்ள வைகை அணை மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய 5 தென் மாவட்டங்களின் விவசாய பாசனத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமாக விளங்கி வருகிறது. கடந்த ஒரு மாத காலமாக விட்டுவிட்டு பெய்து வரும் தொடர் மழை காரணமாக கடந்த நவம்பர் மாதம் 10ம் தேதி வைகை அணை நிரம்பியதை அடுத்து முதலில் பெரியாறு பாசனப்பகுதி இருபோக சாகுபடி நிலங்களில் முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இதையடுத்து வைகை அணையின் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பூர்வீக பாசன பகுதிகளுக்கு தண்ணீர் முதல் சுற்று திறக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டாம் சுற்றாக தண்ணீர் டிசம்பர் 11 முதல் 15ம் தேதி வரை சிவகங்கை மாவட்டத்தின் வைகை பூர்வீக பாசன இரண்டாம் பகுதி நிலங்களுக்கும், கடந்த 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக மூன்றாம் பகுதி பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று முதல் மதுரை மாவட்ட முதல் பகுதி பூர்வீக பாசன நிலங்களுக்கு வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்றிலிருந்து 26ம் தேதி வரை மொத்தமாக 229 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் 6 ஆயிரத்து 31 ஏக்கர் பாசன நிலங்கள் நேரடியாகவும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிலங்கள் மறைமுகமாகவும் பயன்பெறும் என கூறப்படுகிறது.
மேலும் கிருதுமால் நதி பகுதி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் ஆதாரங்களுக்காக 10 நாட்களுக்கு வினாடிக்கு 690 மில்லியன் கன அடி தண்ணீர் வினாடிக்கு 800 கன அடி வீதம் திறக்கப்பட்டுள்ளது. பாசனம் மற்றும் குடிநீருக்காக திறக்கப்பட்டுள்ள ஆயிரத்து 400 கன அடி தண்ணீர் வைகை ஆற்றின் வழியே செல்வதால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் வைகை ஆற்றில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.