தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ளது வைகை அணை. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் ஜீவநாடியாகத் திகழும் வைகை அணைக்கு இன்றுடன் (ஜன. 22) 63 வயது ஆகிறது.
மேகமலை வனப்பகுதியில் உற்பத்தியாகி, அன்றைய ஒருங்கிணைந்த மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் வழியாகச் சென்று வீணாகக் கடலில் கலந்து கொண்டிருந்த வைகை ஆற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் கட்டுவதற்கு அப்போதைய சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த காமராஜர் தீர்மானித்தார்.
வைகைக்கு வயது 63
இதற்காக ஆண்டிபட்டி அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு, ரூ.3 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் வைகை அணை கட்டுவதற்காக கடந்த 1955ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்டது. அணைக் கட்டுமானப் பணிகளை பொதுப் பணித்துறை அமைச்சர் கக்கன் தலைமையிலான பொறியாளர்கள் ஈடுபட்டனர்.
மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த கட்டுமானப் பணிகளை ரூ. 2 கோடியே 90 லட்சத்தில் முடித்து முதலமைச்சர் காமராசரிடம் ஒப்படைக்கப்பட்டது. பொதுப் பணித்துறை அமைச்சர் கக்கன், மீதமிருந்த தொகை ரூ.40 லட்சத்தைக் கொண்டு மைசூரு பிருந்தாவனம் மாதிரியில் அணையின் வலது, இடது கரையில் பூங்காக்கள் அமைக்க காமராசர் அறிவுறுத்தினார்.
இதையடுத்து யானை சறுக்கல், ஊஞ்சல்கள், மினி ரயில், மிருகங்கள் அருங்காட்சியகம், செயற்கை நீரூற்றுக்கள், பூங்காக்கள் என இரு கரைகளிலும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த மினி பிருந்தாவனமாக உருவாக்கப்பட்டது. இதனை கடந்த 1959ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி பொதுப் பணித்துறை அமைச்சர் கக்கன் தலைமையில், 71 அடி உயர நீர்த்தேக்க கொள்ளளவு கொண்ட வைகை அணையை காமராசர் திறந்து வைத்தார்.
பொலிவிழந்த பூங்காக்கள்
நீர்த்தேக்கப் பூங்காக்களை மின்சாரத் துறை அமைச்சர் ராமையா திறந்து வைத்து பொது மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தார். அதனைத் தொடர்ந்து தென் மாவட்டங்களின் முக்கிய சுற்றுலாத் தளமாக உருவெடுத்தது வைகை அணை. பொது மக்கள் மட்டுமின்றி சினிமா படப்பிடிப்புகளும் நடந்து வந்தன. மேலும் 5 மாவட்டங்களில் உள்ள சுமார் 3 லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் சாகுபடி வசதி அடைந்தன. பொது மக்களின் குடிநீர் தாகமும் தீர்ந்தது.
கம்பீரமாகக் காட்சியளிக்கும் வைகை அணைக்கு வயது 63 இத்தகைய சிறப்பு வாய்ந்த வைகை அணை இன்று 63ஆவது வயதில் அடியெடுத்து வைத்துள்ளது. வைர விழா ஆண்டை கடந்தும் கம்பீரமாக இன்றும் உயர்ந்து நிற்கிறது வைகை அணை. ஆனால் பொழுதுபோக்கு அம்சங்களுக்காக உருவாக்கப்பட்ட பூங்காக்களோ பொலிவிழந்து காணப்படுகிறது. சேதமடைந்த சிலைகள், செயல்படாத செயற்கை நீரூற்றுக்கள், உடைந்த மின் விளக்குகள், குப்பைகள் என பொழிவிழந்து காணப்படும் வைகை அணையை பார்க்கும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து செல்கின்றனர்.
ஆண்டுகள் பல கடந்தும் உறுதித் தன்மையோடு இருக்கும் வைகை அணையோடு சேர்த்து, பூங்காக்களையும் பராமரித்து காத்திட பொதுப் பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க... வைகை அணையில் மத்திய நீர்வள குழுவினர் ஆய்வு!