மத்திய அரசை கண்டித்து தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் போடியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போடி திருவள்ளுவர் சிலை அருகே நடைபெற்ற இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கட்சி தலைவர் அசன் ஆரூன் மற்றும் தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
மேலும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் சஞ்சய் தத் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது,"தேர்தல் வந்து விட்டால் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு மக்களை நம்ப வைக்க நீலி கண்ணீர் வடிப்பவர் தான் பிரதமர் மோடி .
அப்படி பொது மக்களை ஏமாற்றி வருவதால் உலக பொய்யர்களின் தலைவராக பிரதமர் மோடி விளங்கி வருகிறார். இடைத்தேர்தல் வந்து விட்டால் அதிமுக அமைச்சர்கள் எல்லாம் வேலையை விட்டு விட்டு வேறு வேலைகளை செய்கின்றனர். ஜிஎஸ்டி வரியால் தொழில்கள் நலிந்து பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன.