தேனி மாவட்டம், அல்லிநகரத்தைச் சேர்ந்த தாமோதரன் - அமுதா தம்பதியரின் மகள் உதயகீர்த்திகா. தேனியில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த அவர், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீதான ஈர்ப்பு காரணமாக, சிறு வயது முதலே விண்வெளி விஞ்ஞானி ஆக வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டிருந்தார். அதன்படி 12ஆம் வகுப்பு படித்து முடித்தவுடன் உக்ரைன் நாட்டிலுள்ள கார்க்கியூ நேஷனல் ஏரோஸ்பேஸ் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கான வாய்ப்பும் கிடைத்தது.
நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவரது தந்தை தாமோதரன் ஒரு சாதாரண ஓவியர், தாய் அமுதா தனியார் நிறுவனத்தில் தட்டச்சராக பணிபுரிந்து வருகிறார். குடும்பத்தால் அவ்வளவு செலவழிக்க முடியாது என்பதால் சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்களின் நிதி உதவியுடன் உக்ரைனில் விண்வெளி குறித்த படிப்பை 92.5 சதவீத மதிப்பெண்களுடன் படித்து முடித்தார். இதற்கிடையே போலாந்து நாட்டின் விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி மையத்தில் ஜெர்மனி, நெதர்லாந்து நாட்டின் விண்வெளி வீரர்களுடன் சேர்ந்து பயிற்சி மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இப்பயிற்சிக்கு சர்வதேச அளவில் 10 மாணவர்கள் மட்டுமே தேர்வாகியுள்ளனர். இதில் இந்தியாவிலிருந்து உதய கீர்த்திகா மட்டுமே தேர்வாகியிருக்கிறார். போலாந்து நாட்டில் விண்வெளி வீரர்களுக்கான பயிற்சியில் பங்கேற்பதற்காக உடல் மற்றும் கல்வித் தகுதி முக்கியமானது. இதில் தேர்ச்சி பெறுவதற்காக தினமும் நீச்சல் பயிற்சி, உடற்பயிற்சி என விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து விடாமுயற்சியில் ஈடுபட்டு வந்தார்.