தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள டி.வாடிப்பட்டி கிராமத்தில் வசித்துவருகின்றனர் நாரயணமூர்த்தி (47) - பரமேஸ்வரி தம்பதியினர். நாராயணமூர்த்தி ஆடு மேய்ப்பவர், இவரது மனைவி பரமேஸ்வரி நூறு நாள் வேலைக்குச் செல்பவர். இத்தம்பதியினருக்கு சர்மிளாதேவி (20), ஜீவித்குமார்(19), தீபன்(15) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.
கூலி வேலைக்குச் செல்லும் இவர்களுக்கு மூவரையும் படிக்கவைப்பது பெரும்பாடாக உள்ளது. இந்நிலையில், ஜீவித்குமார் மருத்துவம் படிக்க முடிவு செய்தார். இவர் சில்வார்பட்டி அரசு மாதிரிப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து கடந்தாண்டு 548 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் இரண்டாவது இடம் பிடித்தார்.
நீட் தேர்வால் தற்கொலை செய்தவர்களின் கதை ஜீவித்குமாரை அதன் பக்கம் இழுத்தது. அந்தத் தேர்வு அவ்வளவு கடினமானதா என்ன? என்ற எண்ணத்தில் முதல் முறை அந்தத் தேர்வை எழுதியிருக்கிறார். அப்போது 193 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளது.
ஆனாலும், ஜீவித் தன்னம்பிக்கையை விடவில்லை. அவருடைய ஆர்வத்தைக் கண்ட வகுப்பாசிரியர் அருள்முருகன், இது குறித்து நீட் தேர்வுக்கு எதிராக அரசுப் பணியை ராஜினாமா செய்த ஆசிரியை சபரிமாலாவிடம் தெரிவித்துள்ளார். பின்னர் தலைமையாசிரியர் மோகன், தன்னார்வலர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் உதவியுடன் ஜீவித் சேலத்தில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்தார்.
தொடர்ந்து ஓராண்டு தமிழ் வழியில் பயிற்சி மேற்கொண்ட ஜீவித்குமார், ஆங்கிலத்தில் தேர்வை எதிர்கொள்ளும் அளவிற்கு தன்னை தயார் படுத்திக் கொண்டார். இந்தாண்டு நீட் தேர்வில் 664 மதிப்பெண்கள் பெற்று அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் தரவரிசையில் இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். ஜீவித்குமாரின் வெற்றியானது அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஒரு உந்து சக்தியாக அமையும்.
ஜீவித் உடைய வெற்றி அனைத்து மாணவர்களுக்கும் ஒரு முன்மாதிரி எனக் கூறும் ஆசிரியர் அருள்முருகன், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயிற்சி மையங்கள் அமைத்து திறமை வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு தேசியக் கல்வி பாடத்திட்டத்தை தமிழ் வழியில் மாணவர்களுக்குத் கற்றுத்தர வேண்டும். இதனால் வருங்காலத்தில் அனைத்து மாணவர்களும் நீட் தேர்வில் வெற்றி பெறுவது சுலபமாக அமையும் என்கிறார்.