ஆண்டிபட்டி தாலுக்காவிற்குட்பட்ட வருசநாடு அருகே உள்ளது பொன்னன்படுகை கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்துவருகின்றனர். இப்பள்ளியில் பயன்பாடின்றி பழுதடைந்த நிலையில் இருந்த சத்துணவு சமையல் கூட கட்டிடமானது பல ஆண்டுகளாக அகற்றப்படாமல் இருந்தது. மழை காரணமாக நேற்று பிற்பகல் இந்தக் கட்டிடத்தின் மேற்கூறை முழுவதும் இடிந்து விழுந்தது.
இச்சம்பவத்தால் அங்கு விளையாடிக்கொண்டிருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவர்கள் செல்வக்குமார், ஈஸ்வரன் ஆகிய இருவரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர். பின்னர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் செல்வக்குமார் என்ற மாணவருக்கு கை, கால், நெஞ்சு பகுதி, முதுகு எலும்புகள் உடைந்ததாகவும் மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு சொல் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பின்னர் மதுரையில் உள்ள எலும்பு சிகிக்சையளிக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். பொன்னன்படுகை கிராமத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண விவசாயக் கூலி தொழிலாளியான ரஞ்சித்குமார் - பூங்கொடி தம்பதியரின் ஒரே ஒரு மகன் தான் செல்வக்குமார். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வலது கையின் எழும்பு முற்றிலும் சேதமடைந்ததால் அறுவை சிகிச்சை மூலம் கையை அகற்றவேண்டும் எனக் கூறி தற்போது ஒரு கையை அகற்றிவிட்டனர்.