தேனி மாவட்டம் அல்லிநகரம் அருகேயுள்ள ஒண்டிவீரன் காலனியைச் சேர்ந்தவர் சேகர் (55). துப்புரவுத் தொழிலாளியான இவர் மனைவி கருப்பாயம்மாள், மகள் வாணி (18) ஆகியோருடன் வசித்துவருகின்றார்.1998ஆம் ஆண்டு நிரந்தரத் துப்புரவுப் பணியாளராக கம்பம் நகராட்சி அலுவலகத்தில் பணிக்குச் சேர்ந்தார்.
19 ஆண்டுளாகப் பணியாற்றி 2017ஆம் ஆண்டு தேனி அல்லிநகரம் நகராட்சியில் பணியிடைமாறுதல் பெற்று பணிபுரிந்துவந்துள்ளார். அதே ஆண்டு அல்லிநகரம் வீரப்பனார் மலைக் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பைச் சரிசெய்வதற்காகக் கழிவுநீர் வடிகாலில் இறங்கி சுத்தம் செய்துள்ளார்.
அப்போது, கழிவுநீர் வடிகாலிலிருந்த மருத்துவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஊசி அவரது வலது கையில் குத்தியுள்ளது. இதனைச் சாதாரணமானதாக நினைத்த சேகருக்கு பின்னர்தான் அதனுடைய விளைவு தெரிய ஆரம்பித்தது. சாதாரணமான கைவலி என்று மருத்துவரை அணுகியபோதுதான் தெரிந்தது பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் துப்புரவுப் பணி செய்ததால் நோய்த்தொற்று ஏற்பட்டு கையின் உள்பகுதி முழுவதும் அழுகிவிட்டதாகவும், மேலும் கையை அறுவை சிகிச்சைசெய்து அகற்றிவிட வேண்டும், இல்லை என்றால் உயிருக்கு ஆபத்து எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மருத்துவரின் அறிவுரையின்படி மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று தனது வலதுகையை பாதி அகற்றிவிட்டார். கையை அகற்றிய ஓரிரு மாதங்களில் அவரது இடது காலும் மற்றொரு கையும் செயலிழந்துவிட்டது. இதன் காரணமாக எந்த ஒரு பணிக்கும் செல்ல முடியாமல் தனது அன்றாட கடமைகளைச் செய்வதற்குக்கூட பிறரது உதவியை நாடும் சூழலுக்குத் தள்ளப்பட்டார்.
இதனால் கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாக வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார். இதற்கிடையே கையை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சைக்கு மூன்று லட்சம் ரூபாய்வரை பணம் செலவுசெய்து கடனில் தவிப்பதாகவும், நகராட்சி சார்பாக மருத்துவம் பிடித்தம் செய்த பணம்கூட கிடைக்காமல் தனக்கு எந்த ஒரு உதவியும் இதுவரை செய்யவில்லை.