தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள வரதப்பன் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள். இவர் வீட்டில் திருமண விசேஷ நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தக்கூடிய நாட்டு வெடிகளை சட்டவிரோதமாக தயாரித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று பிற்பகல் அவர் வீட்டில் இருந்த பட்டாசுகளில் எதிர்பாராதவிதமாக தீ பற்றியதன் காரணமாக தயாரித்து வைத்திருந்த பட்டாசுகள் அதிக சத்தத்துடன் அனைத்தும் வெடித்திருக்கிறது.
இதில் வீட்டின் இரண்டு அறைகள் முற்றிலும் தரைமட்டமாகின. விபத்தில் பாண்டியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்த பாண்டியம்மாளின் மகள் நிவேதாவை பலத்த காயத்துடன் மீட்டனர். பின் அவர் உயிருக்கு மிக ஆபத்தான நிலையில் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மேலும் அருகில் உள்ள குடியிருப்புப் பகுதியில் தீ பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. விபத்து நடந்த இடத்திற்கு பெரியகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் வந்து விசாரணை மேற்கொண்டார். காவல் நிலையத்திற்கு அருகிலேயே சட்டவிரோதமாக வெடிமருந்துகள் வைத்து பட்டாசு தயாரித்து வந்தது காவல் துறையினருக்கு இதுவரை ஏன் தெரியவில்லை என்ற கேள்வி அப்பகுதி மக்களிடம் எழுகிறது.
பெரியகுளத்தில் நாட்டு வெடி பட்டாசு தயாரித்த பெண் உயிரிழப்பு ! இதையும் படிங்க:கள்ளக்குறிச்சியில் மின்கசிவு காரணமாக 2 வீடுகள் தீயில் நாசம்