தேனி மாவட்டம் சுக்குவாடன்பட்டி அருகே இந்திரா நகர் குடியிருப்பு உள்ளது. சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பாக ஆதிதிராவிடர் மக்களுக்கென, இப்பகுதியில் அரசு குடியிருப்புகளை கட்டிக் கொடுத்தது. இப்பகுதிக்கு நாளடைவில் மக்கள் அதிகம் குடிபெயர்ந்து, தற்போது 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்த பகுதிக்கென சுக்குவாடன்பட்டி வழியாக பிரதான பாதை ஒன்று இருந்தது. அந்தப் பாதை சற்று தொலைவில் இருந்ததனால், நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள தனியாருக்குச் சொந்தமான காலி இடத்தை அப்பகுதி மக்கள் நடைபாதையாக பயன்படுத்தி வந்தனர். இதே பாதையை அரசு வழங்குவதற்கு ஏற்பாடு செய்து தர வேண்டுமென இப்பகுதி மக்கள் கடந்த 15 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில் அந்த இடத்தின் உரிமையாளர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் உத்தரவு பெற்று கடந்த 14ஆம் தேதி காவல் துறையினர் பாதுகாப்புடன் சுற்று சுவர் ஒன்றை எழுப்பினார்.
இதனால் இப்பகுதி மக்களுக்கான பாதை தடைபட்டது. இதன் காரணமாக மீண்டும் அதே பாதையை வழங்க வேண்டும் எனக்கூறி சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களது குடியிருப்பை காலி செய்து, ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட புளியந்தோப்பில் தற்காலிக குடில் அமைத்து அங்கேயே தங்கியுள்ளனர்.
பாதை வசதி கேட்டு பட்டியலின மக்கள் போராட்டம் அரசு தரப்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி கடந்த ஒரு வாரமாக எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இந்நிலையில் தங்கள் பகுதிக்கு பாதை வசதி வேண்டி இந்திரா காலனி மக்கள், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டும் சாலையில் அமர்ந்தும் போராட்டம் நடத்தினர்.
இதில் கடந்த 2010ஆம் ஆண்டு இருந்த தேனி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அளித்த வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி, அவற்றை செயல்படுத்திடக்கோரி கண்டன கோசங்களை எழுப்பினர். ஒரு கட்டத்தில் சாலையில் அமர்ந்திருந்த பொதுமக்கள் படுத்துறங்கி போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
மேலும் தங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் குடியுரிமையை ஒப்படைத்து விட்டு மலைப்பகுதிக்கு குடிபெயர்ந்து விடுவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர். பட்டியலின மக்களின் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி, தமிழ்ப்புலிகள் அமைப்பினர் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த போராட்டத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது.