சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றுவதை எதிர்த்து பொதுமக்கள் சாலை மறியல்! தேனி:பங்களாமேட்டில் மதுரை சாலையின் இருபுறமும் பல ஆண்டுகளாக மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 100க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் சிறு சிறு கடைகள் உள்ளன. தற்போது மதுரை சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக சாலை விரிவாக்கம் செய்வதற்காக, சாலையோரம் இருந்த நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த புளியமரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வந்தன.
இதனிடையே கடந்த ஜனவரி 27ஆம் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நெடுஞ்சாலைத் துறையினர் தரப்பில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது. ஆனால், அங்கு வாழ்ந்து வரும் மக்களுக்கு மாற்று இடம் கொடுக்காமல் வீடுகளை இடிக்கக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்து, அந்தப் பகுதி மக்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தினர்.
இதனால் தங்களுக்கு மாற்று இடம் கிடைக்கும் என்று காத்திருந்த நிலையில், மாற்று இடம் கிடைக்காததால் வீடுகளை காலி செய்த பலரும் தங்களின் உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நெடுஞ்சாலைத் துறையினர் முன்னரே நோட்டீஸ் அனுப்பி, கால அவகாசம் கொடுப்பட்ட நிலையில், இன்று (பிப்.14) ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் ஜேசிபி இயந்திரங்களுடன் வந்தனர்.
அப்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பொதுமக்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்களின் சாலை மறியல் போராட்டத்தை அடுத்து, அங்கு ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து பொதுமக்களின் எதிர்ப்புகளுக்கு இடையே நெடுஞ்சாலைத் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
இதையும் படிங்க:ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்.. வேடிக்கை பார்க்கிறதா தேர்தல் ஆணையம்!