தேனி:கேரளாவில் கடந்த மாதம் முதல் டெங்கு வைரஸ், எலி வைரஸ் காய்ச்சல்களால் அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஜூன் மாதத்தில் மட்டும் கேரளாவில் இதுவரை 38 பேர் காய்ச்சலால் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதில் 22 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் பெரும்பாலான இறப்புகள் டெங்கு மற்றும் எலிக் காய்ச்சலால் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஜூன் மாதத்தில் செவ்வாய்க்கிழமை வரை கேரள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற மொத்த காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை 1,74,222 என்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இந்த நிலையில் தற்போது ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சலும் கேரளாவில் பரவி வருவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள பன்றி பண்ணைகளில் உள்ள பன்றிகளை கருணை கொலை செய்ய இடுக்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் எல்லையோர மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் மருத்துவ முகாம்கள் அமைத்து காய்ச்சல் பாதிப்புகள் குறித்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரள எல்லையோர மாவட்டங்களான கோவை, தேனி, கன்னியாகுமரியில் காய்ச்சல் பாதிப்புகளை கண்காணிப்பதுடன், வீடுகள், பள்ளிகள், பூங்காக்கள், கல்லுாரிகள், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் தனித்தனியே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக, கேரள எல்லையான தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம்மெட்டு, குமுளி, போடிமெட்டு பகுதிகளில் தேனி மாவட்ட நிர்வாகமோ, சுகாதாரத் துறையினர் சார்பாகவோ காய்ச்சல் கண்டறியும் கண்காணிப்பு முகாம்கள் அமைக்கப்படாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.