பெரியகுளம்: தேனி மாவட்டம் கானாவிளக்கு பகுதியில் உள்ள தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் உணவகம் மற்றும் கேண்டினை மாரிச்சாமி என்பவர் நடத்தி வருகிறார். ஒவ்வொரு வருடமும் இந்த உணவகம் மற்றும் கேண்டின் டெண்டர் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டு வருவது வழக்கம்.
அந்த வகையில், கடந்த 12 ஆண்டுகளாக மாரிச்சாமி என்பவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கேண்டின் நடத்தி வருகிறார். மேலும், இந்தக் கேண்டின்கு தேவையான குடிநீர் மருத்துவமனையில் இருந்து பெற்று வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மீனாட்சி சுந்தரம் இந்த கேண்டினுக்கு கொடுக்கப்பட்டுள்ள மூன்று குடிநீர் இணைப்புகளையும் துண்டிக்குமாறு உத்தரவிட்டதாகவும், அதை தொடர்ந்து மூன்று குடிநீர் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் குடிநீர் இல்லாத நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நாள்தோறும் 6 ஆயிரம் ரூபாய் கொடுத்து குடிநீர் பெற்று உணவகத்தை நடத்தி வந்தாகவும், தொடர்ந்து குடிநீர் இணைப்பு கிடைக்காததால் உணவகத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் கூறப்படிகிறது.