தேனி மாவட்டம், போடியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் வேலைவாய்ப்பிற்காகக் கடந்த ஜனவரி மாதம் துபாய் சென்றார். கரோனா நோய் பரவலால், வேலை கிடைக்காமல் சிரமப்பட்டு வந்தவர், சென்ற மாதம் மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டார்.
இதனையடுத்து, அண்மையில் அவருக்கு புற்றுநோய்ப் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால், ஒரு மாதத்தில் 20 கிலோ எடை குறைந்து, உடல் மெலிந்து காணப்பட்டார்.
மேலும், வருமானம் இல்லாமல் மருத்துவச் செலவிற்குப் பணமின்றி, உயிருக்குப் போராடி வந்த அந்த இளைஞர், தனது நிலை குறித்து நண்பர்களுக்குக் காணொலி வழியாக விவரித்துள்ளார்.
இந்த காணொலியைப் பார்த்து கண்கலங்கிய அவரது பெற்றோர், நண்பர்கள், தேனி மாவட்ட நிர்வாகம், ஆட்சியாளர்கள் உதவும்படி கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்று துபாய் வாழ் தமிழர்கள், தன்னார்வலர்கள், தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் ஆகியோர் உதவியுடன் இந்திய வெளியுறவுத்துறையின் அனுமதி பெற்று நேற்று முன்தினம் சிறப்பு விமானம் மூலம் நாடு திரும்பினார்.
கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்கிய அந்த இளைஞர், அங்கிருந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், அங்கு அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இந்த பரிசோதனை முடிவில், அந்த இளைஞருக்கு கரோனோ நோய்த் தொற்று இருப்பது நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதியானது.
இதனையடுத்து, அந்த இளைஞர் கரோனா சிறப்புப் பிரிவில், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். மேலும் துபாயிலிருந்து இந்தியா வந்தடைந்ததும் அவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்களின், ரத்த மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பப்பட உள்ளன.
இதையும் படிங்க : இ பாஸ் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டுக்குள் அனுமதி...! விமான பயணத்துக்கான நெறிமுறைகளை வெளியிட்டது அரசு