தேனி மாவட்டத்தில் நூற்றுக்கும் குறைவான எண்ணிக்கையில் இருந்த கரோனா பாதிப்பு, தளர்த்தப்பட்ட ஊரடங்கால் ஜூன் மாதத்தில் வேகமெடுக்க தொடங்கியது. சென்னை உள்ளிட்ட சிவப்பு மண்டலத்தில் இருந்து வருகை புரிந்தவர்களால் ஏற்பட்ட சமூக பரவலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது இரண்டாயிரத்தை கடந்துள்ளது.
கரோனா தொற்றால் நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் உயிரிழப்பு!
தேனி : நகைக்கடை உரிமையாளர் உள்பட மூன்று பேர் கரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், தேனி மாவட்டத்தில் அதன் மொத்த எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் மூன்று பெண் குழந்தைகள் உள்பட 78 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த தேனியைச் சேர்ந்த பிரபல நகைக்கடை உரிமையாளர், தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த உத்தமபாளையத்தைச் சேர்ந்த 45 வயது ஆண், தேனியைச் சேர்ந்த 65 வயது பெண் உள்பட மூன்று பேர் உயரிழந்தனர்.
நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெரியகுளம், போடியைச் சேர்ந்தவர்கள். ஆண்டிபட்டியில் ஐந்து பேர், போடியில் 19 பேர், சின்னமனூரில் 10 பேர், கம்பத்தில் 11 பேர், பெரியகுளத்தில் 23 பேர், தேனியில் 8 பேர், உத்தமபாளையத்தில் இருவர் என 78 நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 2,053ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் தற்போது வரை 827பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,201 நபர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.