தேனி:தமிழகத்தில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாகப் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்கக் கடத்த வாரம் முதல் குளிக்க வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.
இந்நிலையில், மழை குறைந்ததால் அருவியில் பெருக்கெடுத்த வெள்ள நீரின் அளவு சற்று குறைந்து காணப்பட்டதால், 6 நாட்களுக்குப் பின் இன்று (டிச.24) முதல் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இருப்பினும், மக்களின் பாதுகாப்பு கருதி மெயின் அருவிக்குச் சென்று குளிக்கத் தடை நீடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், குளிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் அருவியின் ஓரத்தில் செல்லும் ஓடைகளில் குளித்துச் செல்கின்றனர்.
இந்நிலையில், அருவியில் குளிக்க அனுமதிப்பது குறித்து வனத்துறையினர் முதல் நாளே அறிவிப்பு வெளியிடும் நிலையில், இன்று முன்னறிவிப்பு இன்றி காலையில் திறக்கப்பட்டதால் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்தே காணப்படுகிறது.