குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் எனப் பலர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்பினர் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடந்த 21 நாள்களாக தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, சவப்பெட்டி வைத்து போராடுதல், கண்களில் கறுப்புத்துணி கட்டி எதிர்ப்பு தெரிவித்தல், மெழுகுவர்த்தி ஏந்தி போராடுதல் உள்ளிட்ட பல்வேறு வகை போராட்டங்களில் மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் தரும் வகையில் இஸ்லாமியர்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், தேனி மாவட்ட அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பினர் ஒன்று சேர்ந்து சில தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளனர். அதில், வரும் சட்டபேரவை கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறுவதாக தீர்மானம் நிறைவேற்றாவிட்டால், ரம்ஜான் பண்டிகைக்காக தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் நோன்பு கஞ்சி அரிசியை வாங்காமல் புறக்கணிப்பது என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.
இந்தத் தொடர் போராட்டத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 300க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்று, தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வரை, தங்கள் போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:போராட்டங்கள் மூலம் நீதிமன்றத்தை நிர்பந்திப்பதா? - நீதிபதிகள் எச்சரிக்கை!