தமிழ் நாட்டில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. நான்கு ஆண்டுகளாக காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் என்பதால் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் சுயேட்சை வேட்பாளர்களும் பெருவாரியானோர் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியத்திற்குட்பட்ட கீழவடகரை ஊராட்சியில் உள்ள 10ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் அஹமது முஸ்தபா என்பவர் வாக்காளர்களிடம் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார்.
பொதுமக்களுக்கு சீப்பால் தலைவாரிவிட்டு வாக்கு சேகரித்த சுயேட்சை வேட்பாளர்! தேர்தலில் போட்டியிடும் இவருக்கு தேர்தல் ஆணையம் தலை சீவும் சீப்பு சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இச்சின்னத்தை வாக்காளர்கள் மனதில் பதிய வைக்கும் நோக்கில், சீப்புகளைக் கொண்டு பொதுமக்களின் தலைகளை வாரி விட்டு வாக்கு சேகரித்தார். மேலும் தலை சீவிய பின் நீங்கள் அழகாக இருப்பது போல், எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் உள்பட அனைத்து தேவைகளையும் பூர்த்திசெய்து அழகாக மாற்றுவேன் எனக் கூறி வாக்கு சேகரித்தார். மேலும், வாக்குக்கு பணம் தரமாட்டேன், பொதுமக்களுக்கு செய்கின்ற சேவைக்காக யாரிடமும் கையூட்டு பெற மாட்டேன் எனவும் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: அரசியலில் களமிறங்கியுள்ள 21வயது கல்லூரி மாணவன்!