கேரள மாநிலத்தில் உள்ளது இடுக்கி அணை. இந்த அணையில் உள்ள நீர் பெரும்பாலும் மின் உற்பத்திக்கே பயன்படுத்தப்படுகிறது. இங்கு கடந்த மாதம் 27ஆம் தேதி அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அணைக்கு அருகில் உள்ள 20வீடுகளில் லேசான விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் அடுத்த சில நாட்களில் மீண்டும் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவில் மூன்று என்ற அளவில் பதிவாகி இருந்தது. இதனையடுத்து புவியியல் துறையினர் அணைப் பகுதிகளில் இன்று ஆய்வு மேற்கொண்டனர். இதில் அணையிலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டுவருவதால் பொதுமக்களும் அச்சம் அடைந்துள்ளனர். இது குறித்து இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஹெச்.தினேசன் கூறுகையில், தொடர் நிலநடுக்கம் குறித்து புவியியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றார்.
இடுக்கி அணையில் தொடர் நிலநடுக்கம் இடுக்கி சட்டப்பேரவை உறுப்பினர் அகஸ்டின் கூறுகையில், புவியியல் துறை அலுவலர்கள் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வின் முடிவில் விவரங்கள் தெரியவரும் என்றார்.
இதையும் படிங்க: கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக குறைவு!