தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலை அமைக்கும் பணியை தாங்களே தொடங்கிய கிராம மக்கள்! - சாலை எங்கே

தேனி: பெரியகுளம் அருகே ஒப்பந்தம் விடப்பட்டும் சாலை அமைப்பதில் ஏற்பட்ட காலதாமதத்தால், தாங்களாகவே பணிகளைத் தொடங்கிய பூர்வகுடி மக்களை, மாவட்ட ஆட்சியர் தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

சாலை அமைத்து தர கோரிக்கை

By

Published : Aug 24, 2019, 6:27 AM IST

பெரியகுளம் அருகே உள்ள அகமலை ஊராட்சி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் போடி தொகுதிக்கு உட்பட்டதாகும். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணக்கரை பகுதியிலிருந்து இரண்டரை கிமீ தூரத்தில் சொர்க்கமலை என்ற மலை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் மலைவாழ் பழங்குடி இன மக்கள் ஆவர்.

இந்நிலையில், சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையிலும், இன்றும் சாலை வசதி இல்லாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் உடல்நிலை சரி இல்லாது போனாலோ; பிரசவ நேரங்களில் பெண்கள் அவதிப் பட்டாலோ; டோலி கட்டி தான் கண்ணக்கரை வரை கொண்டு வந்து அங்கிருந்து வாகனத்தில் பெரியகுளம் கொண்டு செல்வர்.

இதனால் பல ஆண்டுகளாக போடி சட்டப்பேரவை உறுப்பினரும், துணை முதலமைச்சருமான ஓ.பிஎஸ்-ஸிடம் சாலை வசதி வேண்டி அப்பகுதி மக்கள் மனு அளித்து வந்த நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு 2.5 கிலோ மீட்டர் தூரத்திற்குச் சாலை அமைக்க, சுமார் ஆறு கோடியே 70 லட்சம் ரூபாய் ஒப்பந்தம் விடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சாலை எங்கே..? மக்களாகவே முன் வந்து வேலையை தொடங்கினர்

ஒப்பந்தம் விடப்பட்டு நில அளவு பணிகள் முடிந்து, மூன்றாண்டுகள் ஆன நிலையிலும், சாலைப் பணிகள் தொடங்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில், மலை கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இன்று தாங்களாகவே சாலை அமைக்கும் பணிகளைத் தொடங்கினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், தேனி மாவட்ட வன அலுவலர் கௌதம், ஊராட்சித்துறை அலுவலர்கள் ஆகியோர் சாலை இல்லாத மலைப் பாதையில் நடந்தே சென்று, சாலை அமைக்கும் பணிகளைத் தொடங்கிய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் கூடிய விரைவில் சாலைப் பணிகள் தொடங்கப்படும் எனவும், மலைக் கிராம மக்களின் சேதம் அடைந்த வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என வாக்குறுதி கொடுத்ததால், மலைக் கிராம மக்கள் சாலை அமைக்கும் பணியைக் கைவிட்டனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்போம் என்றும், மீண்டும் சாலைப் பணிகளை தாங்களே செய்து, சாலையை அமைத்துக் கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details