தேனி மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலை, அதன் அடிவாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாகத் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களாக பெரியகுளம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ததால், பூமி குளிர்ந்தது. இதனால் கல்லாறு, முருகமலை, செலும்பு, சோத்துப்பாறை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் இயற்கை காளான்கள் வெடிக்கத் தொடங்கின.
இயற்கையாகக் கிடைத்த காளான்கள் தற்போது பெரியகுளம் சந்தையில் விற்பனைக்கு குவிந்துள்ளது. மொட்டுக் காளான் 1 கிலோ ரூ.500 முதல் ரூ.600 வரைக்கும், மலர்ந்த காளான் ரூ.400 முதல் ரூ.450 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை காளான் என்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.