தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் பின்புறம் மாவட்ட பல்துறை பெருந்திட்ட வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் 20க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த அலுவலகத்தில் தேனி மாவட்ட ஒருங்கினைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகமும் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்தில் மாவட்ட திட்ட அலுவலராக பணியாற்றி வருபவர், ராஜராஜேஸ்வரி. இவர் இன்று (மே 30) அலுவகத்தில் வழக்கமான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது இந்த அலுவலகத்தில் முன்பு பணியாற்றி தற்போது திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் பணிபுரிந்து வந்த உமாசங்கர் என்பவர், ராஜராஜேஸ்வரியை சந்திக்க அவரது அறைக்குள் சென்றார்.
அப்போது ராஜராஜேஸ்வரியிடம் பேசிக்கொண்டிருந்த உமாசங்கர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ராஜராஜேஸ்வரியை கை, தலை, முகம் ஆகிய இடங்களில் சரமாரியாக அடுத்தடுத்து வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் இருந்த ராஜராஜேஸ்வரி அலறத்தொடங்கினார். இதனைக் கண்ட மற்ற ஊழியர்கள் உமாசங்கரை வளைத்து பிடித்து அங்கிருந்த அறையில் வைத்து பூட்டினர்.
பின்னர் உடனடியாக ராஜராஜேஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த உமாசங்கரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச்சென்றனர்.