தேனி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கானாவிலக்குகப் பகுதியில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களைப் பார்க்க வரும் உறவினர்களுக்கு இரவு நேரங்களில் நோயாளிகளுக்கு அருகே இருக்க அனுமதி இல்லாததால், மருத்துவமனை வார்டுகளின் வெளிப்புறப் பகுதிகளிலும், மருத்துவமனை வளாகத்திலுள்ள சாலையோரத் திட்டுகளிலும் படுத்து உறங்கி நோயாளிகளை கவனித்துச் செல்கின்றனர்.
இந்நிலையில், நேற்று (செப்.28) இரவு ஒரே நாளில் மருத்துவமனை சிகிச்சைக்காக வார்டுகளிலுள்ள பல்வேறு இடங்களில் படுத்து உறங்கிய பொதுமக்கள் 20க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:குப்பையை தரம் பிரிக்கும் இயந்திரத்தில் சிக்கிய ஊழியர் - கோவையில் பரபரப்பு!
தொடர்ச்சியாக, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வார்டுகள் மற்றும் வெளிப்புறப் பகுதிகளில் படுத்து உறங்கும் பொதுமக்களின் செல்போன்கள் திருடப்படுவது வாடிக்கையாக உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கூறும்போது, தொடர்ந்து வார்டுகளில் அடிக்கடி இரவு நேரங்களில் இது போன்ற செல்போன் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.