தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழைத் தொடங்கி, கடந்த சில தினங்களாக மாவட்டங்களில் ஆங்காங்கே மழை தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் பருவ மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் முக்கிய நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில் வைகையின் பிறப்பிடங்களான வெள்ளிமலை, மேகமலை உள்ளிட்ட பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்க்கின்றது.
இதனால் கோம்பைத்தொழு அருகே அமைந்துள்ள மேகமலை அருவி என்றழைக்கப்படும் சின்னசுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் அருவியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து, கனமழை பெய்து வருவதால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவியில் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது.