தேனி மாவட்டம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே செயல்பட்டு வந்த உழவர் சந்தை, கரோனா நோய் பரவலால் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டது. பின்னர் பொதுமக்களின் நலன் கருதி சமூக இடைவெளியுடன் கூடிய இட வசதிக்காக கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலையத்தில் செயல்பட்டது. ஆனாலும் கரோனா நோய்த் தொற்றின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் அதுவும் மூடப்பட்டு நடமாடும் காய்கறிகள் ஆரம்பிக்கப்பட்டன.
"தேனி உழவர் சந்தை நவம்பர் 11ஆம் தேதி முதல் பழைய இடத்திலேயே வழக்கம் போல் செயல்படும்" - theni farmers market
தேனி: உழவர் சந்தை வரும் நவம்பர் 11ஆம் தேதி முதல் வழக்கம் போல அதன் இருப்பிடத்தில் செயல்படும் என வேளாண்மை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சுக்குவாடன்பட்டியில் உள்ள வேளாண் விற்பனைக்கூடத்திற்கு உழவர் சந்தை இடமாற்றம் செய்யப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகின்றன. இந்த விற்பனைக் கூடமானது தேனி நகரில் இருந்து 5 கி.மீ தூரத்தில் இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் சிரமடைந்து வந்தனர். இதன் காரணமாக நகரின் மையப்பகுதியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த இடத்தில் உழவர் சந்தையை இயக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், வருகின்ற நவம்பர் 11ஆம் தேதி முதல் வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள உழவர் சந்தை வளாகத்திலே வழக்கம் போல சந்தை செயல்படும் என தேனி வேளாண்மை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.