தேனி: தேனி மாவட்டத்தை லோயர்கேம்பிலிருந்து பதினெட்டாம் கால்வாய் மற்றும் பி.டி.ஆர் கால்வாய்களில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கோரி விவசாய சங்கத்தினர் கர்னல் ஜான் பென்னிகுவிக் சிலைக்கு மனு அளித்து நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம், முல்லை - பெரியாறு அணையில் இருந்து ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் பதினெட்டாம் கால்வாய் வழியாக விவசாய நிலங்களுக்கு பாசன வசதிகளுக்காக தண்ணீர் திறந்து விடுவது வழக்கமான ஒன்று. இந்நிலையில், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் போதிய அளவு இருந்தும், கடந்த இரண்டு மாதங்களாக தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளது.
இதனால் பாசன வசதி பெறும் சுமார் 9,000 ஏக்கர் நிலங்கள் தண்ணீர் இன்றி காய்ந்த நிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விட விவசாய சங்கத்தினர் தொடர்ச்சியாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.