தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்ட வன அலுவலர்கள், வன உயிரின காப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை சென்னையிலுள்ள முதன்மைத் தலைமைப் பாதுகாவலர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
இவற்றில் தேனி மாவட்ட வன அலுவலர் கௌதம், திருநெல்வேலி மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின சரணாலய காப்பாளராகப் பணியிட மாற்றம்செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல கடலூர் மாவட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன் மேகமலை வன உயிரின சரணாலய காப்பாளராக மாற்றம்செய்யப்பட்டுள்ளார்.
மேற்கண்ட இருவரும் 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட குரங்கனி தீ விபத்திற்குப் பின் தேனி மாவட்டத்திற்குப் பணியிட மாறுதலாகி வந்தவர்கள். மூன்று ஆண்டுகள் தேனி மாவட்டத்தில் பணியாற்றிய இவர்கள், தமிழ்நாடு – கேரள எல்லையில் சாக்குளத்துமெட்டிலுள்ள தமிழ்நாடு வனப்பகுதியில் கேரளாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் சட்டவிரோதமாக சாலை அமைத்ததற்கு உறுதுணையாகச் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால், அவர்களைப் பணியிட மாற்றம்செய்து, விசாரணைக்குள்படுத்தப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரியார் - வைகை பாசன ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்தப் பணியிட மாற்றம் நடைபெற்றிருக்கிறது.
இதையும் படிங்க: தமிழ்நாடு காப்புகாட்டிற்குள் பாதை அமைத்த கேரள நிறுவனம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை!