தேனி:தமிழ்நாட்டின் பல பகுதிகளில் உள்ள உணவகங்கள், பழக்கடைகள், பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்டவைகளில் உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடியாக சோதனையிட்டு வருகின்றனர். சோதனையில் கிடைக்கும் காலாவதியான உணவுப்பொருட்களை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பள்ளி வளாகத்தை சுற்றியுள்ள பழக்கடைகள், உணவு விடுதிகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் உணவு பாதுகாப்புத்துறை இன்று (ஜூலை 20) திடீர் ஆய்வு மேற்கொண்டது. பள்ளி வளாகத்தைச் சுற்றியுள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும், உணவு விடுதிகளில் காலாவதியான உணவுப்பொருட்கள் விற்கப்படுவதாகவும் எழுந்தப் புகாரை அடுத்து தேனி மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி ராகவன் தலைமையில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: Tomato Price Hike: மகள் பிறந்தநாள் விழாவில் விருந்தினர்களுக்கு தக்காளி விநியோகித்த தந்தை!
இந்த ஆய்வில் பள்ளி வளாகத்திற்கு அருகில் உள்ள சுமார் 25-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பள்ளி வளாகத்திற்கு அருகில் இருந்த ஐஸ்கிரீம் கடை ஒன்றில் ஆய்வு செய்யப்பட்ட போது காலாவதியான ஐஸ்கிரீம் பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன. அங்கு இருந்த பழக்கடை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பார்ப்பதற்கு பளப்பளப்பிற்காக மெழுகு பூசப்பட்ட பழங்களில் பளபளப்பாக இருப்பதற்காக மெழுகு பூசப்பட்டுள்ளது கண்டறியப்பட்டு பழங்கள் பறிமுதல் செய்தனர்.