தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோட்டைச்சாமி. இவர், தென்மண்டல டிஐஜி நாகராஜின் சகோதரர் ஆவார். கடந்த ஜூன் 22ஆம் தேதி கோட்டைச்சாமியின் மனைவி புஷ்பவள்ளி வீட்டில் இருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் உள்ளே புகுந்து, அவர் கழுத்தில் அணிந்திருந்த 11 சவரன் தங்க நகையை திருடிச் சென்றுள்ளார்.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகார் குறித்து சின்னமனூர் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (எ) அருண் (29) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 11 சவரன் தங்க நகையை மீட்டனர். பின்னர், அவரை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர். மேலும், அவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
தொடர் மணல் திருட்டு...
இதேபோல், ஆண்டிப்பட்டி அருகே மறவபட்டியைச் சேர்ந்த சின்னமணி என்பவரது மகன் அருண்பாண்டி (21). இவர், கடந்த ஜூலை 15ஆம் தேதி உத்தராயப்பெருமாள் கண்மாயில் சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டபோது, ஆண்டிப்பட்டி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு பெரியகுளம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். இதுதவிர, அவர் மீது ஏற்கனவே மணல் திருட்டில் ஈடுபட்டதாக ராஜதானி காவல் நிலையத்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருந்துவருகிறது.
இந்நிலையில், மேற்குறிப்பிட்ட இரண்டு குற்றவாளிகள் தொடர்ந்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்திடும் பொருட்டு, அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி பரிந்துரை செய்தார். அதனடிப்படையில் ரமேஷ் (எ) அருண் மற்றும் அருண்பாண்டி ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புக் காவலில் அடைப்பதற்கு, மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:'நாங்கள் கோவிட் அலுவலர்கள்' பரிசோதிப்பது போல் நாடகமாடி 54 ஆயிரத்தை திருடிய இருவர் கைது..!