தேனி: டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என சையதுகான் சில நாள்களுக்கு முன்பு கூறிய நிலையில் தற்போது தினகரனுக்கு அதிமுக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தது அரசியல் வட்டாரங்களில் மிகுந்த பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவான கருத்தை சசிகலாவும், தினகரனும் கூறி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடர்ந்து ஓபிஎஸ், தினகரன், சசிகலா ஆகியோர் கருத்துகளை கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனியில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ்ஸின் ஆதரவாளரும், தேனி மாவட்ட அதிமுக செயலாளருமான சையதுகான், தினகரன், சசிகலா ஆகியோர் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும், இவர்கள் ஜெயலலிதா உடன் பயனித்தவர்கள், அவர்கள் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் அமமுக சார்பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக தினகரன் மதுரையில் இருந்து தேனி நோக்கி வந்தார். அப்போது ஆண்டிபட்டி கனவாய் பகுதியில் சையதுகான் மற்றும் அதிமுக நிர்வாகிகள் காத்திருந்து தினகரனை சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்தனர்.