தேனி: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உட்கட்சி மோதல் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ள சூழலில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளில் சிலர் சென்னையில் பசுமை வழிச்சாலையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்த சம்பவம் தேனி மாவட்ட அதிமுகவினரிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான் உடனடியாக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகளை அழைத்து ஓபிஎஸ்க்கு சொந்தமான கைலாசபட்டியில் உள்ள பண்ணை வீட்டில் திடீர் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சையது கான், "எடப்பாடி பழனிசாமியை சந்தித்தவர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்கள் தான். பொறுப்பில் உள்ள 2 பேர் மட்டுமே அவரை சந்தித்து உள்ளதாகவும், கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதும், தற்போது உள்ள நிலை தொடர வேண்டும் என்பதே தேனி மாவட்ட நிர்வாகிகளின் எண்ணமாக உள்ளது" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தேனி மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் ஓபிஎஸ்க்கு ஆதரவாக உள்ளதாகவும், ஜெயலலிதா தலைமையை ஏற்று தற்போது கட்சியை விட்டு பிரிந்து சென்றவர்கள் அனைவரும் மீண்டும் கட்சியில் இனைந்து ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்" என தெரிவித்தார். இந்த கூட்டத்தில் சமீபத்தில் கட்சியை விட்டு நீக்கப்பட்ட ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.