கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி,தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு விரைந்து நிவாரண நடவடிக்கைகளை எடுக்க திமுக அரசுக்கு வலியுறுத்தல் தேனி: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தின் தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் கடந்த 2 நாட்களாகக் கனமழை முதல் அதிக கனமழை பெய்து வருகிறது. இதனால் இம்மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 57 அடியில் 55 அடி எட்டிய நிலையில், கடந்த 50 நாட்களாக அணைக்கு வரும் உபரி நீர்ப் பாசனத்திற்காகத் திறந்து விடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, கடந்த 20மணி நேரத்திற்கும் மேலாகத் தேனி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து 90 கன அடியிலிருந்து 382 அடியாக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க:கருமேகங்களால் சூழப்பட்டிருக்கும் வால்பாறை.. சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக பயணிக்குமாறு வனத்துறை அறிவுறுத்தல்..
தற்பொழுது மஞ்சளாறு அணையின் முழு கொள்ளளவான 57 அடியில் 56.50 அடியாக நீர் உள்ளது. இதனால் மஞ்சளாறு அணைக்கு வரும் உபரி நீரான 382 கன அடி நீரை அப்படியே மஞ்சளாறு ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தேனி - திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள ஆற்றங்கரையோர பகுதிகளான கெங்குவார்பட்டி, G.கல்லுப்பட்டி, தும்மலப்பட்டி, வத்தலகுண்டு, விருவீடு உள்ளிட்ட பகுதி மக்கள் ஆற்றைக் கடக்கவோ, குளிக்கவோ கூடாது என பொது பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், தொடர் மழை பொய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் உயர்த்தப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:வராக நதி மற்றும் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: நீரில் அடித்து செல்லப்பட்ட தென்னை மற்றும் இலவ மரங்கள்!