தேனி:அரசு வழங்கிய பஞ்சமி நிலத்தை பட்டியலினம் அல்லாதவருக்கு விற்க பட்டா அளித்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும்; அவ்வாறு வழங்கிய பட்டாவை ரத்து செய்யக்கோரியும் பட்டியலின பொதுமக்கள் குடிசைகள் அமைத்துப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியகுளம் வட்டாரம் வடபுதுப்பட்டியில் 1925ஆம் ஆண்டு 11 ஏக்கர் பஞ்சமி நிலத்தை சின்னகாமன் என்பவருக்கு அரசு வழங்கியது. அதனை சின்னகாமன் 1941ஆம் ஆண்டு மாற்று சமூகத்திற்கு விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது. பின் அவ்விடம் வேறு சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்குப் பட்டா மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தச்சூழலில் தங்கள் சமூக மக்களுக்கு அரசால் கொடுக்கப்பட்ட நிலத்தை மாற்று சமூகத்திற்கு பட்டா போட்டு வழங்கியதை ரத்து செய்யக்கோரி, கடந்த சில ஆண்டுகளாக பட்டியலினத்தைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இதனிடையே 100க்கும் மேற்பட்டோர் இன்று (செப்.19) வடபுதுப்பட்டியில் உள்ள சம்பந்தப்பட்ட இடத்தில் குடிசைகள் அமைத்து இடத்தை கையகப்படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் இதுகுறித்து தகவல் அறிந்த பெரியகுளம் வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பஞ்சமி நிலத்தை மாற்று சமூகத்தினருக்கு பட்டா போட்டு வழங்கியதை ரத்து செய்ய கோரிக்கை இவ்வாறாக, பஞ்சமி நிலத்தை மாற்று சமூகத்திற்கு பட்டா வழங்கிய அலுவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்; தங்கள் சமூக மக்களுக்குச் சொந்தமான இடத்தை பட்டியலினம் அல்லாதவர் அனுபவித்து வந்தால், அவ்வாறு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி குடிசைகள் அமைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், தங்களின் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படும் வரை தொடர்ந்து அக்குடிசைகளிலேயே தொடர்ந்து தங்கப் போவதாக அம்மக்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: காலை உணவுத்திட்டம் முதலமைச்சரின் பேரன் அமர்ந்து உண்ணும் அளவிற்கு தரமானதாக இருக்குமா?: சீமான்