நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்த மாணவன் உதித்சூர்யா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் அமைத்த விசாரணைக் குழுவில் ஆள்மாறாட்டம் மோசடி உறுதியானதை அடுத்து மாணவர் உதித்சூர்யா குடும்பத்துடன் தலைமறைவானர்.
இந்த வழக்கை தனிப்படை காவல் துறையினர் விசாரணை செய்துவந்த நிலையில், பின்னர் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி ஆந்திர மாநிலம் கீழ் திருப்பதியில் தலைமறைவாக இருந்த மாணவன் உதித்சூர்யா, அவரது தந்தை மருத்துவர் வெங்கடேஷ் கைது செய்யப்பட்டு தேனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது.
சிபிசிஐடி காவல் ஆணையர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற விசாரணையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, உதித்சூர்யா, அவரது தந்தை மருத்துவர் வெங்கடேஷ் ஆகியோரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்து, கூட்டுச்சதி, ஆவணங்களைத் திருத்தி மோசடி செய்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.