தேனி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் நிலவரம் குறித்து அம்மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மாநிலத்திலேயே முன்னோடியாக தேனி மாவட்டத்தில்தான் சமூகப் பரவல் மூலம் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா எனக் கண்டறியும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் முதற்கட்டமாக, போடி நகராட்சிப் பகுதியில் ஒரு நடமாடும் சிறப்பு மாதிரி சேகரிப்பு மையம் உள்பட மூன்று சிறப்பு மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு, இதுவரை 415 நபர்களிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
அதில் இன்று ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்த நபர் உடனடியாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருவதுடன், அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் அனைவரது மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் மாதிரிகள் சேகரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு போடி நகராட்சிப் பகுதியில் மட்டும் 106 மாதிரிகளும், தேனி மாவட்டத்தில் மொத்தமாக 273 மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தங்களின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், அண்டை வீடுகளில் உள்ள நபர்கள் எவரேனும் வெளிநாடு வெளிமாநிலம் சென்று வந்திருந்தால் அவர்களின் விவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை (தொலைபேசி எண் - 04546 – 261093 /1077), கிராமப்பகுதிகளில் உள்ள காவல் துறையினர் உள்ளடக்கிய கிராம கண்காணிப்பு குழு ஆகியவற்றினைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து வெளியூர், வெளி மாநிலங்களுக்கு செல்வதற்கான வாகன அனுமதிச்சீட்டு பெறுவது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும்பொருட்டு தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் திருமணம், இறப்பு, மருத்துவம் ஆகிய இடங்களுக்குச் செல்வதற்கும், தாங்கள் வசிக்கும் மாவட்டத்தை விட்டு பிற மாவட்டங்கள் அல்லது பிற மாநிலங்களுக்குச் செல்வதற்கும் அனுமதி பெறுவது எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு பயணிக்க www.tnepass.tnega.org என்ற இணையதளம் வழியாக ஆண்ட்ராய்டு கைப்பேசி வழியாக உரிய சான்றுகள் இணைத்து விண்ணப்பிக்கலாம். ஆண்ட்ராய்டு கைப்பேசி பயன்படுத்த இயலாதவர்கள், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இயங்கிவரும் இ-சேவை மையங்களில் இலவசமாக விண்ணப்பிக்கவும் அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ளது” எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அனுமதியின்றி ஆள்களை ஏற்றிவரும் லாரிகள், வாகனங்கள் குறித்து பேசிய அவர், ”மாநில, மாவட்ட எல்லைப் பகுதியான கம்பம்மெட்டு சோதனைச்சாவடியில் அனுமதியின்றி கேரளாவிற்கு தேனி மாவட்டத்தில் ஆள்களை ஏற்றிவந்த லாரி ஓட்டுநர், உதவியாளர், உரிய அனுமதி இன்றி பயணம் செய்த இரண்டு நபர்களுக்கு பரிசோதனைசெய்யப்பட்டு பின்னர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு லாரி பறிமுதல்செய்யப்பட்டுள்ளது. மேலும் இதே போன்று சரக்கு வாகனங்களில் அனுமதியின்றி ஆள்களை ஏற்றிக்கொண்டு மாவட்டத்திற்குள் வரும் வாகனங்கள், நபர்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டின் வூஹான் ஆன கோயம்பேடு; தவறு எங்கே நடந்தது?