தேனி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள இராஜாக்காள்பட்டி ஊராட்சிக்குட்பட்டது கதிர்வேல்புரம் கிராமம். வேலப்பர் கோவில் மலையடிவாரத்தில் அமைந்துள்ள இந்தப் பகுதியில், 31 குடும்பங்களைச் சேர்ந்த 93 பளியர் இன பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர்.
பளியர் இன மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடும் பொருட்டும், அப்பகுதிகளில் கூடுதலாக மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்தும், மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் இன்று (நவ.17) அங்கு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில், அப்பகுதியில் உள்ள பழுதடைந்த வீடுகளை பார்வையிட்டு, அதனை சரி செய்வதற்கும், வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி வழங்கிடவும், அடிப்படை வசதிகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்து விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பளியர் இன மக்களிடம் ஆட்சியர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, அப் பழங்குடியின மக்களுக்கான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
அதன்படி, மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியின்படி, மலைப்பகுதிகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், தகுதியான பயனாளிகளுக்கு வேளாண்மைத்துறையின் மூலம் தலா ரூ.33,000 மதிப்பீட்டில், ஒரு குடும்பத்திற்கு 10 ஆடுகள் வீதம், ரூ.8.58 இலட்சம் மதிப்பீட்டில் 26 பயனாளிகளுக்கும், தலா ரூ.6,000 மதிப்பீட்டில், ஒரு குடும்பத்திற்கு 30 கோழிகள் வீதம், ரூ.1.56 இலட்சம் மதிப்பீட்டில் 26 பயனாளிகளுக்கும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் தலா ரூ.8,000 மதிப்பீட்டில், ஒரு குடும்பத்திற்கு 5 தேனீ வளர்ப்பு பெட்டிகள், ரூ.2.08 இலட்சம் மதிப்பீட்டில் 26 பயனாளிகளுக்கும், 13 பயனாளிகளுக்கு ரூ.1.04 இலட்சம் மதிப்பீட்டில் தேன் எடுக்கும் கருவிகள் வழங்கப்பட்டன.