மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் பெய்துவரும் தொடர் மழையால் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துவருகிறது. கடந்த ஆகஸ்ட் மாத இறுதி வரை அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதியளவு மழை இல்லாததால் வறண்டுக் காணப்பட்டது.
இதனையடுத்து செப்டம்பர் மாத தொடக்கத்தில் அகமலை, ஊரடி, ஊத்துக்காடு உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் வேகமாக உயரத் தொடங்கியது.
இந்நிலையில் 126.28 அடி உயர நீர்த்தேக்கக் கொள்ளளவு கொண்ட சோத்துப்பாறை அணை இன்று காலை நிலவரப்படி 121.28 அடியை எட்டியுள்ளது. இதன் காரணமாக பெரியகுளம், வடுகபட்டி, மேல்மங்களம், ஜெயமங்களம், குள்ளப்புரம் உள்ளிட்ட வராக நதிக் கரையோரப்பகுதி மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கைவிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.
அணையின் மொத்த நீர் இருப்பு 91.65 மி.கன அடியாக இருக்கிறது. விநாடிக்கு 13 கனஅடி நீர்வரத்து உள்ள நிலையில் பெரியகுளம் பகுதி குடிநீர்த் தேவைக்காக 3 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் சோத்துப்பாறை அணை அதன் முழுக்கொள்ளளவை எட்டிவிடக்கூடும் என்பதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.