தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சேர்ந்தவர் மல்லிகாஅர்ச்சுனன்(59), அவரது மனைவி விமாலாவுடன் மேலப்பூக்காரத் தெருவில் வசித்து வருகிறார். இவர் கடந்த 20 ஆண்டுகளாக ஆண்டிபட்டி பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகின்றார். இவரின் இரண்டு ஆண் பிள்ளைகளும் திருமணமாகி, தனித்தனியே வசிக்கிறார்கள்.
ஆட்டோவில் விழிப்புணர்வு வாசகங்கள் கரோனா நோய்த்தொற்று காரணமாக, இவரது ஆட்டோவில் பயணம் செய்பவர்களை கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். மேலும் பயணிகளின் உடல் நலன் கருதி, ஆட்டோவில் ஏற்றுவதற்கு முன் கட்டாயம் கைகளை சுத்தம் செய்ய வைக்கிறார்.
இதற்காக தனது ஆட்டோவில் ஒரு குடம் தண்ணீர் வைத்து பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட குழாய் வழியாக தண்ணீரால், கைகளை கழுவச் செய்தும்; கிருமி நாசினி மருந்துகளை கைகளில் தேய்க்கவைத்த பின்னரும் தான் பயணிகளை, தன் ஆட்டோவில் பயணம் செய்ய அனுமதிக்கிறார்.
பொதுவாக ஆட்டோக்களில் வணிக நிறுவனங்களின் விளம்பர பதாகைகள், திரை நடிகர்களின் போட்டோக்கள் இடம் பெற்றிருக்கும். ஆனால், மல்லிகா அர்ச்சுனனின் ஆட்டோவில், இதற்கு மாறாக கரோனா நோய்த்தொற்று விழிப்புணர்வு குறித்த பதாகைகளும், கடந்த மூன்று மாத செய்தித்தாள்களில் வெளிவந்த கரோனா பாதிப்பு தொடர்பான செய்திகளும்தான் ஒட்டப்பட்டுள்ளன. விழிப்புணர்வு, பாதிப்பு செய்திகள் வாயிலாகவும் மக்களிடம் கரோனா அச்சத்தை உணர வைத்து வருகின்றார், மல்லிகா அர்ச்சுனன். ஆட்டோ ஓட்டுநரின் இந்த புதிய முயற்சி அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
ஆட்டோவில் விழிப்புணர்வு வாசகங்களும் செய்தித்தாள்களும்... இது குறித்து ஆட்டோ ஓட்டுநர் மல்லிகாஅர்ச்சுனன் கூறுகையில், "ஆரம்ப காலத்தில் தனியார் பேருந்தில் நடத்துநராகப் பணிபுரிந்து வந்தேன். அதைத் தொடர்ந்து கடந்த 20 ஆண்டுகளாகச் சொந்தமாக ஆட்டோ வாங்கி, ஓட்டி வருகிறேன். உலகையே ஆட்டிப் படைத்து வரும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர் கிருமியான கரோனா நோய்த் தொற்றால் இந்தியாவில் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தபோதிலும் மக்களாகிய நாமும் சுயபாதுகாப்புடன் வாழ வேண்டும். 60 நாட்களுக்கும் மேலாக நீடித்த பொது ஊரடங்கிற்குப் பிறகு, கடந்த சில நாட்களாகத்தான் பேருந்து, ஆட்டோ, டாக்சி உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து சேவைகள் தொடங்கியுள்ளன.
இந்த வேளையில் பயணிகள், பொதுமக்களின் உடல் நலன் கருதி, எனது ஆட்டோவில் பயணிப்பவர்கள் கைகளை நன்றாகச் சுத்தம் செய்ய வைத்த பின்னர் தான் பயணிக்கிறேன். இதற்காக பெரிதாக ஏதும் செலவு செய்யவில்லை. வீட்டில் இருக்கும் தண்ணீர் குடத்தினை குழாயுடன் சேர்த்து வடிவமைத்துள்ளேன்.
மேலும் அரசு கூறிய அறிவுறுத்தலின்படி, குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளைத்தான் ஆட்டோவில் அனுமதிக்கிறேன். இவ்வாறு பயணிகளின் உடல் நலன் காப்பதால், எனக்கும் மனமகிழ்ச்சி கிடைக்கிறது. எனவே, பொதுமக்களும் முகக்கவசம் அணிந்து கைகளை நன்றாகச் சுத்தம் செய்து, பாதுகாப்புடன் வாழ வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க:ஆட்டோ ஓட்டுநராக மாறிய புகைப்படக் கலைஞர்: பிபிஇ உடையுடன் சவாரி!