தேனி:தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ரஞ்சித்குமார் (42). இவர் ராஜகாந்தம் என்ற பெண்ணிற்குச் சொந்தமான தென்னந்தோப்பு உள்ளிட்ட விவசாய நிலத்தை வாங்கிக் கொள்வதாகக் கூறி, 20 லட்சம் ரூபாய் முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளார்.
இந்நிலையில், ராஜகாந்தம் என்பவரது மகன் விஜயன் மற்றும் வழக்கறிஞர்கள் மதன், ஜெயபிரபு, சொக்கர் ஆகிய நான்கு பேரும் ரஞ்சித்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட மோதலில், வழக்கறிஞர் ரஞ்சித்தின் தந்தையை எதிர் தரப்பினர் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனால் வழக்கறிஞர் ரஞ்சித் மற்றும் வழக்கறிஞர்கள் மதன், சொக்கர், ஜெயபிரபு ஆகியோருக்கிடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ராஜகாந்தம்மாள் மகன் விஜயன், ரஞ்சித்திடம் விற்பனை செய்த நிலத்தை எப்படியாவது மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்காக கூலிப்படை ஆட்களான சூப் செல்வம், ராஜேஷ், ஆனந்த், ராஜா, வேல்முருகன் ஆகிய ஐந்து பேரைக் கொண்டு வழக்கறிஞர் ரஞ்சித்தை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, உத்தமபாளையம் நீதிமன்றத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த ரஞ்சித்தின் வாகனத்தின் மீது காரை விட்டு மோதி, சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உத்தமபாளையம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணையானது தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், ரஞ்சித்குமாரின் கொலை வழக்கு முடிவுற்ற நிலையில், சாட்சியங்களின் அடிப்படையில், வழக்கறிஞர்கள் ஜெய பிரபு, சொக்கர் மற்றும் விஜயன், சூப் செல்வம், ராஜேஷ், ஆனந்த், ராஜா, வேல்முருகன் ஆகிய எட்டு நபர்களுக்கு ஆயுள் தண்டனை அளித்தும், தலா 5,000 ரூபாய் அபராதம் விதித்தும் தேனி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி கோபிநாதன் தீர்ப்பு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, குற்றவாளிகளை காவல் துறையினரின் பலத்த பாதுகாப்புடன் மதுரை, பாளையங்கோட்டை மற்றும் சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க:சென்னையில் சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு!