திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள செந்துறை பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் என்பவரது மகன் சதாம்உசேன் (19). இவர், கம்பம்மெட்டு சாலையில் உள்ள அரபுக்கல்லூரியில் தங்கிப் படித்துவருகிறார். விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்த சதாம் உசேன், நேற்றிரவு கம்பம் வழியாகக் கல்லூரிக்குச் சென்றுள்ளார்.
வழிப்பறி கும்பலைக் கைது செய்த காவல் துறை கம்பம் எம்.எஸ்.ஆர். காய்கறி கடை அருகே சென்றபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், கல்லூரி மாணவர் சதாம் உசேனிடம் வழிப்பறியில் ஈடுபட்டனர். கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த இரண்டாயிரத்து 800 ரூபாய், செல்ஃபோன், பையிலிருந்த துணிகள் ஆகியவற்றை பறித்துச்சென்றுள்ளனர். பணம், செல்ஃபோன், ஆடைகளை பறிகொடுத்த மாணவர் சதாம் உசேன் இச்சம்பவம் குறித்து கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், வழிப்பறி கும்பலை கம்பம் பகுதியின் முக்கியமான இடங்களில் தேடிவந்தனர். இந்நிலையில், கம்பம் பேருந்து நிலையத்தில், சந்தேகப்படும்படியாக நின்றிருந்த ஒரு கும்பலிடம் காவல் துறையினர் வழிமறித்து விசாரித்தனர். ஆனால், அந்தக் கும்பல் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகத்தின்பேரில் காவல் நிலையம் அழைத்துச்செல்லப்பட்டு, தங்களுக்கே உரித்தான பாணியில் விசாரணை செய்தனர்.
இதில் கல்லூரி மாணவர் சதாம் உசேனிடம் வழிப்பறி செய்ததை அந்தக் கும்பல் ஒப்புக்கொண்டது. இந்தக் கும்பலிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கம்பம் வாழவந்தான் கோவில் தெருவைச் சேர்ந்த பவுன்துரை மகன் மனோஜ் குமார் (18), சஞ்சய் குமார் (19), ரமேஷ் சஞ்சய் குமார் (19) என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து கொள்ளையடித்துச் சென்ற பொருட்களை காவல் துறையினர் கைப்பற்றினர்.