தேனி: கரோனா கட்டுப்பாடுகளால் கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான ஊர்வலம் நடத்துவதற்கு தடை செய்யப்பட்டிருந்த நிலையில் விநாயகர் சிலைகள் செய்யபடவில்லை. இந்த நிலையில் தற்போது கரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா இம்மாதம் 31ஆம் தேதி நடைபெற உள்ளது.
2 ஆண்டுகளுக்குப்பிறகு நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் அதனையொட்டி நடைபெறும் ஊர்வலத்திற்காக தேனியில் விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்து எழுச்சி முன்னணி சார்பில் தேனியில் விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
4 அடி முதல் 12 அடி வரையிலான சிலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. சிங்க விநாயகர், மயில் வாகன விநாயகர், தாமரை மலர் விநாயகர், உள்ளிட்டப் பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.