தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Theni - உயர் மின்னழுத்த வழித்தடம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்த மக்கள் - திரும்பி அனுப்பப்பட்ட ஊழியர்கள்

குடியிருக்கும் வீடுகளின் அருகில் உயர் மின்னழுத்த வழித்தடம் அமைக்கும் பணிக்கு வந்த மின்வாரிய ஊழியர்களிடம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மின்வாரிய ஊழியர்களைத் திரும்பி அனுப்பினர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 27, 2023, 5:08 PM IST

Theni - உயர் மின்னழுத்த வழித்தடம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்த மக்கள் - திரும்பி அனுப்பப்பட்ட ஊழியர்கள்

தேனி: பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம் சத்யாநகர் பகுதியில் உள்ள மிகக் குறுகலான தெருக்களில் உயர் மின்னழுத்தக் கம்பி வழித்தடத்தை, மின்வாரிய ஊழியர்கள் அமைக்கும் பணியை கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் குறுகிய தெருக்களில் உள்ள வீடுகளின் மிக அருகில் உயர் மின்னழுத்த மின்சாரம் கொண்டு செல்ல மின்கம்பங்கள் ஊன்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து, இன்று (ஜூலை 27) மின்வாரிய ஊழியர்கள் மின் கம்பிகளைப் பொருத்தும் பணிக்காக வந்தனர்.

அப்பொழுது அந்த குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, உயர் மின்னழுத்தக் கம்பி வழித்தடத்தை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து மின்வாரிய ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து ஜெயமங்கலம் காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த ஜெயமங்கலம் காவல்துறையினர், வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு மின்வாரிய ஊழியர்கள் பணியை நிறுத்திவிட்டு, மின் இணைப்பு இணைப்பதற்காக கொண்டு வந்த மின் உபகரணங்களை திருப்பி எடுத்துச்சென்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "மிகக் குறுகிய தெருக்களில் உள்ள வீடுகளின் மிக அருகில் மின் கம்பங்களை நிறுவி, மின்சாரம் கொண்டு செல்லப்படுவதால், பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.

குழந்தைகள், பெரியவர்கள் என மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த குறுகிய தெருக்களில் உயர் மின்னழுத்த கம்பி வழித்தடத்தை அமைப்பதன் மூலம் விபத்துகள் மற்றும் அதனால் உயிரிழப்புகூட ஏற்படும் சூழல் உள்ளது. ஆகவே, குடியிருப்பு வீடுகளோ, மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதிகளில் சென்ற உயர் மின் அழுத்த வழித்தடத்தை அமைக்கட்டும்'' எனத் தெரிவித்தனர்.

மேலும், ஒரு சிலரின் சுயலாபத்திற்காக குறுகிய தெருக்களில் உயர் மின்னழுத்த வழித்தடத்தைக் கொண்டு வருவதால் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த மின் வழித்தடத்தை எதிர்த்து பொதுமக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இது இவ்வாறு இருக்க, மின்வாரிய ஊழியர்கள் பொது மக்களுக்கு எதிராக செயல்படுவதால் மின்வாரிய ஊழியர்களை பணிகளை செய்ய விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளோம் எனத் தெரிவித்தனர்.

குடியிருக்கும் வீடுகளின் அருகில் உயர் மின்னழுத்த வழித்தடம் அமைக்கும் பணிக்கு வந்த மின்வாரிய ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, எதிர்ப்புத் தெரிவித்ததால் மின்வாரிய ஊழியர்கள் பணிகளை நிறுத்தி விட்டு திரும்பிச்சென்ற சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:பழனி கோயிலில் சேவல், கோழிகளை குறைந்த விலைக்கு ஏலம் விட பொதுமக்கள் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details