தஞ்சை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலையை கடந்த சில தினங்களுக்கு முன் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கருப்பு மை பூசியும், சாணம் வீசியும் அவமரியாதை செய்தனர். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து தஞ்சையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் காவித் துண்டு மற்றும் ருத்ராட்சை அணிவித்ததால் அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள திருவள்ளுவர் சிலையை சிலர் அவமரியாதை செய்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த தேனி மாவட்ட பாஜகவினர் பெரியகுளம் கச்சேரி சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலையை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து, பாலபிஷேகம் செய்தனர். பின்னர் காவித் துண்டு அணிவிப்பதற்காக வந்திருந்த தேனி பாஜக பொறுப்பாளர் ராஜபாண்டியன் உள்ளிட்ட பாஜகவினரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் காவித் துண்டு அணிவிப்பதை கைவிட்டு திருவள்ளுவர் சிலைக்கு சந்தனம், குங்குமம் இட்டு பூஜை செய்து வழிபட்டனர்.