கேரளா: மூணாறு அருகே மறையூரில் 55 ஆயிரத்துக்கும் அதிகமான சந்தன மரங்கள் உள்ளன. இயற்கை சீற்றங்கள் மூலம் உடைந்து விழும் சந்தனமரங்களும், கடத்தலின்போது பறிமுதல் செய்யப்படும் சந்தன கட்டைகளும், மறையூரில் சந்தன டிப்போவில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
கடத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட சந்தன கட்டைகள் உள்ளிட்டவைகள் ஆண்டுக்கு இரு முறை ஏலம் விடப்படும். இதில் இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமானோர் பங்கேற்று, தேவைக்கு ஏற்ப சந்தன கட்டைகளை வாங்கிச் செல்வர். சமீப காலம் வரை மறையூரில் நேரடியாக ஏலம் நடத்தப்பட்டு வந்தது.
இதனால் பலரால் ஏலத்தில் பங்கேற்க இயலாத நிலை ஏற்பட்டதால், இதை நிவர்த்தி செய்து அனைவரும் ஏலத்தில் பங்கேற்க வசதியாக, 'இ’- ஏலம் முறையில் ஏலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான சந்தனக்கட்டை 'இ’- ஏலம் அக்டோபர் 12, 13 தேதிகளில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 10,415 கிலோ சந்தன கட்டை விற்பனையானது. இதன் மூலம் அரசுக்கு 43 கோடியே 50 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
கடத்தப்பட்ட சந்தன மரங்கள் ஏலம் மேலும் கடந்த 11ம் தேதி நடைபெற்ற சந்தன தைலம் ஏலத்தில் கர்நாடகா சோப்ஸ் அன்ட் டிடர்ஜென்ட்ஸ் என்ற பொதுத்துறை நிறுவனம் ரூ.30 கோடி மதிப்பிலான சந்தன தைலத்தை வாங்கியுள்ளது. இந்த ஏலத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து பத்து நிறுவனங்கள் பங்கேற்றன. ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் ஏலத்தின் மூலம் அரசுக்கு சராசரியாக ரூ.100 கோடி வருவாய் கிடைக்கிறது.
இதையும் படிங்க:தலைமறைவான குற்றவாளிகள் சென்னை விமான நிலையத்தில் கைது!