தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது செல்லாங்காலணி. பழங்குடியினத்தைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வசித்துவருகின்றனர். கரோனா நோய் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பெரியகுளத்தில் கரோனா பெருந்தொற்று பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து காய்கறி சந்தைகள் மற்றும் மளிகைக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு பொதுமக்களின் இல்லத்திற்கே நேரடி விநியோகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் செல்லாங்காலணி பகுதி பழங்குடியின மக்களுக்கு நீதிபதிகள் குழு உதவிக்கரம் நீட்டியுள்ளனர். தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகள் அப்துல் காதர், ஜியாபுதீன், வெங்கடேசன் உள்ளிட்டோர் இணைந்து தலா ரூ.1,200 மதிப்பிலான மளிகை பொருள்களை 50 குடும்பங்களுக்கு வழங்கினர்.