தேனி: இயக்குநர் மாரி செல்வராஜ் (director Mari Selvaraj) இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin), வடிவேலு (Vadivelu), கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh) மற்றும் ஃபகத் ஃபாசில் (Fahadh Faasil) ஆகியோரது நடிப்பில் மாமன்னன் (Maamannan) திரைப்படம் இன்று (ஜூன் 29) தமிழ்நாடு முழுவதும் வெளியாகியது. மாரி செல்வராஜின் முந்தைய படங்களைப் போலவே இப்படமும் அழுத்தமான கதையைப் பேசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தைப் பார்த்த நடிகர் கமல்ஹாசன் (Kamal Haasan), தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (M. K. Stalin), நடிகர் தனுஷ் (Dhanush) உள்ளிட்டோர் வெகுவாகப் பாராட்டியுள்ளனர். இதனால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில், டிக்கெட் முன்பதிவு எதிர்பார்த்ததைவிட அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் வெளியானதை ஒட்டி, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உதயநிதி ஸ்டாலினின் ரசிகர்கள் மற்றும் திமுக தொண்டர்கள் எனப் பலரும் படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.
மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தேவர்மகன் (Thevar Magan) படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பேசிய பேச்சுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு சில தரப்பினர் அவரது பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த நிலையில், தேனி மாவட்டம் முழுவதும் மாமன்னன் திரைப்படத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.
மாமன்னன் திரைப்படம் வெளிவந்தால் சட்டம் ஒழுங்கு சீர்கேடும், சாதி மோதல்கள் உருவாகும் என்று தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டும்; திரையரங்கில் படம் வெளியிடக் கூடாது, மீறி வெளியிட்டால் திரையரங்குகளில் தாக்குதல் நடத்தப்படும் எனவும் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.