தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையிலிருந்து மேல்மங்கலம், அதனைச் சுற்றியுள்ள பாசன நிலத்திற்கு அரசாணைப்படி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தேனி திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் இன்று விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மேல்மங்கலம், வராகநதி, ராஜவாய்க்கால் பாசன நீரினைப் பயன்படுத்துவோர் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட அந்த மனுவில், "2009ஆம் ஆண்டு அரசாணை நிலை எண் 212இன்படி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் ஆகிய கிராமங்களில் உள்ள 2,500 ஏக்கர் நஞ்சை நிலத்திற்கு எந்தவித நிபந்தனையுமின்றி சோத்துப்பாறை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பது உத்தரவு.
ஆனால், கடந்த அக்டோபர் 26ஆம் தேதி சோத்துப்பாறை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில் எங்கள் பகுதிக்கு தண்ணீர் வழங்க பொதுப்பணித் துறையினர் மறுத்துவருகின்றனர். 2009ஆம் ஆண்டு பெறப்பட்ட அரசாணை செல்லாது எனவும், ஒவ்வொரு ஆண்டும் அரசாணை பெற்ற பிறகுதான் தண்ணீர் வழங்க முடியும் எனவும் பொதுப்பணித் துறையினர் தெரிவிக்கின்றனர். எனவே இது குறித்து நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதிக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.