தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பொன்னன்படுகை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பழுதடைந்த சத்துணவு கூட கட்டடம் இடிந்துவிழுந்தது. இதில் வலது கையை இழந்த மாணவர் செல்வக்குமாரின் குடும்பத்தினரை, திமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களிடம் ஆதாயம் தேட வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை. பொதுத் தேர்தல் போலவே உள்ளாட்சித் தேர்தலிலும் பணப்பட்டுவாடா செய்து வெற்றி பெறும் வேலையில், ஆளுங்கட்சியினர் இறங்கியுள்ளனர். ஓட்டுக்கு 200 முதல் 300 ரூபாய் வரையில் விநியோகம் செய்யப்படுகிறது. அவர்கள் கொள்ளையடித்த பணத்தை மக்களுக்கு கொடுத்து வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைக்கின்றனர். ஆனால் அது நிச்சயம் நடக்காது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்தான் மிகப்பெரிய வெற்றி பெறும்" என்று உறுதிப்படத் தெரிவித்தார்.