தேனி நாடாளுமன்றத்தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் போட்டியிடுகிறார். இதற்காக மார்ச் 23 ஆம் தேதி தனது வேட்பு மனுவை தேர்தல் அலுவரிடம் ரவீந்திரநாத் தாக்கல் செய்தார். இந்நிலையில் இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. இதில் ரவீந்திரநாத் வேட்புமனு ஏற்கப்பட்டதாக மாவட்ட தேர்தல் அலுவலர் பல்லவி பல்தேவ் அறிவித்தார்.
இந்நிலையில் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் தாக்கல் செய்த வேட்பு மனுவின் பிரமாணப் பத்திரத்தில் அவரது சொத்துக்கள் சிலவற்றை மறைத்துள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளரும், தேனி தொகுதி அமமுக வேட்பாளருமான தங்க தமிழ்ச்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வன் கூறுகையில்,
துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமார், ஜெயபிரதீப் மற்றும் மகள் கவிதா பானு ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள தனியார் நிறுவனம் மற்றும் அப்பகுதிகளில் அமைந்துள்ள காற்றாலை என சுமார் 3.5 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இவை எதுவும் ரவீந்திரநாத் வேட்பு மனுவில் குறிப்பிடப்படவில்லை. இது குறித்து தேர்தல் அலுவலரிடம் புகார் கூறியதற்கு, தற்போது அளித்த விண்ணப்பம் சரியாக உள்ளதாகவும், இதனை நீதிமன்றத்தை அணுகி தீர்வு காணலாம் எனவும் கூறினார். இதன் அடிப்படையில், நாங்கள் ரவீந்திரநாத்குமாரின் வேட்பு மனுவை ஏற்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன் எனக் கூறினார்.